அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக்கோரிதூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்;ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை
அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ. நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூடலூர்: அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ. நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு நிர்ணயித்த சம்பளம்
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் 60 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினசரி குறைந்தபட்ச கூலியாக ரூ.653 வழங்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ரூ.315 மட்டுமே வழங்குவதாக தூய்மை பணியாளர்கள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தூய்மை பணிக்கு கூடுதலாக 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒப்பந்ததாரர் சில தினங்களுக்கு முன்பு சம்பளம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது, இது தொடர்பாக சம்பளம் வழங்கும் ஒப்பந்ததாரரிடம் தூய்மை பணியாளர்கள் பலமுறை கேட்டனர்.
வேலை நிறுத்தம்
மேலும் மாவட்ட கலெக்டர் அருணாவை சந்தித்து முறையிட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு நிலுவைத்தொகை மற்றும் அரசு நிர்ணயித்த சம்பளத்தை சரியாக வழங்க வேண்டும் என கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணி முடங்கியது.
தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக பிரச்சினையை புகார் அளித்தால் விசாரணை நடத்துவதாக ஆர்.டி.ஓ. தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பளம் விரைவில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.