பேராவூரணியில், தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்
பேராவூரணியில், தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்
ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரி பேராவூரணியில், தென்னை விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் நடிகர் கருணாஸ் கலந்துகொண்டார்.
தென்னை சாகுபடி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் சுமார் 1.20 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கஜாபுயலுக்கு பிறகு, தென்னை சார்ந்த தொழில்கள் வெகுவாகப்பாதிக்கப்பட்டது. தேங்காய் விலை சரிவால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது ஒரு தேங்காய் ரூ. 8-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுகிறது.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமான தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கவும், தேங்காய் எண்ணெய்யை மக்கள் பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம்
நேற்று பேராவூரணியில் ஈஸ்ட் - கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு ஈஸ்ட் - கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வ.ராம்குமார், பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக அசோக்குமார் எம்.எல்.ஏ., கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈரோடு செ.நல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.வும், திரைப்பட நடிகருமான கருணாஸ், முன்னாள் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிற்பேட்டை
உண்ணாவிரதத்தில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை தவிர்த்து தென்னை விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் வினியோகிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் காலை, மதியம் சத்துணவில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். பேராவூரணி பகுதியில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில், தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும்.
ஏற்றுமதி
தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களின் உள்நாட்டு விற்பனைக்கு, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.
கேரள அரசு கூட்டுறவுத்துறை மூலம் உரித்த தேங்காய்களை விவசாயிகளிடம் வாங்குவது போல், தமிழகத்தில் ஒரு கிலோ தேங்காயை 40 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து வரும் அனைத்து கொப்பரைகளையும், ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதுடன், கொள்முதல் விலையை ஒரு கிலோவுக்கு 140 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.