பெரியகுளத்தில் அரசு பள்ளி முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
பெரியகுளத்தில் அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியகுளத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக பெற்றோர் சிலர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சில பெற்றோர்கள் பள்ளி முன்பு நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பள்ளி மாணவிகளை தரக்குறைவாக பேசும் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் மாணவிகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கூடுதல் கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.