பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மும்முரம்


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில்  விடைத்தாள் திருத்தும் பணி மும்முரம்
x

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விடைத்தாள் திருத்தும் பணி

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தேர்வு தொடங்கியது. இதில் பிளஸ்-2 வகுப்பிற்கு கடந்த 28-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு 30-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்பிற்கு 31-ந்தேதியும் தேர்வுகள் முடிவடைந்தன. இதை தொடர்ந்து தேர்வு மையங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பிற்கும், ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பிற்கும் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. இதில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு முகாம் அலுவலராக வெங்கடேஷ்வரனும், எஸ்.எஸ்.எல்.சி. மையத்திற்கு சற்குணவதி முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டன. மேலும் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

துல்லியமாக திருத்த வேண்டும்

பிளஸ்-2 வகுப்பிற்கு 58,500 விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்த பணியில் 65 முதன்மை தேர்வர்கள், 65 கூர்ந்தாய்வாளர்கள், 375 உதவி தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், கணக்கு பதிவியல், கணினி அறிவியல், வணிகவியல், உயிரியல் உள்பட 18 பாடங்களை சேர்ந்த விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்த பணிகள் வருகிற 8-ந்தேதி நிறைவு பெறுகின்றன.எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் 37,640 விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. இந்த பணியில் 405 உதவி தேர்வர்கள், 35 கூர்ந்தாய்வாளர்கள், 35 முதன்மை தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வருகிற 6-ந்தேதி வரை விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.விடைத்தாள்களை கவனமாக திருத்த வேண்டும். எந்தவித புகாருக்கும் இடம் கொடுக்க கூடாது. எந்த விடைகளும் விட்டு போகாமல் துல்லியமாக திருத்தி சரியான மதிப்பெண்களை போட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story