பொள்ளாச்சியில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை களை கட்டியது
பொள்ளாச்சியில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை களை கட்டியது.
பொள்ளாச்சி
பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. வரத்து குறைவு காரணமாக மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்பனையானது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். இதன் காரணமாக பொள்ளாச்சி சத்திரம் வீதி, காந்தி மார்க்கெட், தேர்நிலை திடல், திரு.வி.க. மார்க்கெட்டில் பூக்கள், மஞ்சள் மற்றும் கரும்புகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் வீடுகளில் காப்பு கட்டுவதற்கு ஆவாரம் பூ, பூளைப்பூக்களை வாங்கினர். இதனால் கடை வீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. பொள்ளாச்சி சத்திரம் வீதி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து இருந்தது.
இதற்கிடையில் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோ ரூ.3,500 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கும், மஞ்சள் ஒரு ஜோடி ரூ.40-க்கும், ஆவாரம் மற்றும் பூளைப்பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.20-க்கும் விற்பனை ஆனது. பொருட்களை வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களை சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். பூக்கள் விலை குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
மல்லிகை ரூ.3,500-க்கு விற்பனை
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. வழக்கமாக பொள்ளாச்சிக்கு பொங்கல் பண்டிகைக்கு 5 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைவு காரணமாக 3 டன் பூக்கள் தான் கொண்டு வரப்பட்டன.
விலை அதிகரிப்பு காரணமாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.3,500 வரையும், முல்லை ரூ.2,500, ஜாதிப்பூ ரூ.1,700 வரையும் விற்பனை ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.