பொள்ளாச்சியில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை தாயே கடத்தி சென்றதால் பரபரப்பு


பொள்ளாச்சியில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை தாயே கடத்தி சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை தாயே கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை தாயே கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி கடத்தல்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளியை விட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 7 வயது மகள் மட்டும் அந்த தொழிலாளியின் பராமரிப்பில் உள்ளார். அந்த சிறுமி ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து ஆட்டோவில் ஏறுவதற்கு அவர் வந்தார்.

அப்போது அங்கு ஒரு பெண்ணும், வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் ஆட்டோவை டிரைவரை திசை திருப்பி 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறுமியை தூக்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக பறந்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் அந்த மோட்டார் சைக்கிளை துரத்தி சென்றனர்.

போலீசார் விசாரணை

ஆனால் கோவை ரோட்டில் சென்ற மோட்டார் சைக்கிளை பொதுமக்களால் விரட்டி பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் பள்ளி முன் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரவியதும் கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் பொதுமக்கள் தெரிவித்த அடையாளங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தாய் கள்ளக்காதலுடன் சேர்ந்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி முடிந்து வந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story