ராமேசுவரத்தில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படையால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு ராஜா, கிளாட்வின், சகாயம், எமரிட் தட்சிணாமூர்த்தி ஆல்வின் உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும் மற்றும் மீனவப் பெண்களும் கலந்து கொண்டனர்.
2-வது நாளாக வேலை நிறுத்தம்
இதனிடையே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ராமேசுவரத்தில் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.