குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்;56.62 சதவீத வாக்குப்பதிவு
குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டார். இந்த தேர்தலில் 56.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டார். இந்த தேர்தலில் 56.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஊரக உள்ளாட்சித்தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 30-4-2022 வரை ஏற்பட்ட காலிப்பதவியிடங்களுக்கு 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு உறுப்பினர், குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டு உறுப்பினர், மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர், கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் ஆகிய 5 காலிப்பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் நேற்று நடந்தது.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. மாலை 5 மணிமுதல் 6 மணி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், தனிமைபடுத்தப்பட்டு இருப்பவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ள வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். இதற்கான வாக்குகளின் எண்ணிக்கை 12-ந் தேதி அன்று காலை 8 மணிக்கு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
56.62 சதவீத வாக்குப்பதிவு
நேற்று மாலை 6 மணி வரையில் நடந்த வாக்குப்பதிவில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டில் மொத்தம் உள்ள 4918 வாக்காளர்களில் 2787 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப்பதிவு சதவீதம் 56.67 ஆகும். குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டில் மொத்தம் உள்ள 5217 வாக்காளர்களில் 2809 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப்பதிவு சதவீதம் 53.84 ஆகும்.
தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டில் மொத்தம் உள்ள 522 வாக்காளர்களில் 287 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 54.98 ஆகும். திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டில் மொத்தம் உள்ள 551 வாக்காளர்களில் 406 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப்பதிவு சதவீதம் 73.68 ஆகும். காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டில் மொத்தம் உள்ள 855 வாக்காளர்களில் 541 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப்பதிவு சதவீதம் 63.27 ஆகும்.
ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 53.84 சதவீத வாக்குகளும், கிராம ஊராட்சி வார்டுகளில் 67.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 12,063 வாக்காளர்களில் 6830 பேர் வாக்களித்தள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 56.62 ஆகும்.
தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்
இந்த தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
குருந்தன்கோடு ஒன்றிய 7-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் உள்பட 5 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க.வின் தேர்தல் அலுவலக பொறுப்பாளராக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு அவருடைய காரில் கட்சிக்காரர்கள் சிலருடன் தலக்குளம் தெற்கு புதுவிளை பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
அங்குள்ள ஒரு கோவில் அருகே சென்றபோது தலக்குளம் கீழவிளையை சேர்ந்த மணிகண்டன், பள்ளவிளையை சேர்ந்த கோபு, அய்யப்பன், ஆயர்பாடி ரமேஷ் உட்பட 9 பேர் கொண்ட கும்பல் வெட்டுக்கத்தி, கம்பி, கல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோபாலகிருஷ்ணன் சென்ற காரை தடுத்து நிறுத்தி சேதப்படுத்தி அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
9 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த தாக்குதலின்போது கோபாலகிருஷ்ணன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலி, கையில் அணிந்திருந்த 2 பவுன் பிரேஸ்லெட் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த கும்பல் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 9 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் புதுவிளையை சேர்ந்த சுதாகர் என்பவரையும் அய்யப்பன், சுனில் உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.