சேலத்தில், டியூசனுக்கு சென்று திரும்பிய 5-ம் வகுப்பு மாணவன் காரில் கடத்தல்?-போலீசார் விசாரணை


சேலத்தில், டியூசனுக்கு சென்று திரும்பிய 5-ம் வகுப்பு மாணவன் காரில் கடத்தல்?-போலீசார் விசாரணை
x

சேலத்தில் டியூசனுக்கு சென்று திரும்பிய 5-ம் வகுப்பு மாணவன் காரில் கடத்தப்பட்டானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த 11 வயதுடைய மாணவன் ஒருவன் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று மாலை அதே பகுதியில் பக்கத்து தெருவில் உள்ள ஒரு டியூசன் சென்டருக்கு படிப்பதற்கு சென்றான். பின்னர் டியூசன் முடிந்த பிறகு மாணவன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அதில் இருந்த 2 பேர் அந்த மாணவனிடம் காரில் ஏறு, வீட்டில் கொண்டு விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய அந்த மாணவனும் காரில் ஏறிக்கொண்டான். மர்ம நபர்கள், 4 ரோடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவன் காரில் இருந்து கீழே இறங்கி வீட்டுக்கு தப்பித்து வந்துவிட்டான்.

இதுகுறித்து அவன் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாணவனை காரில் கடத்த முயன்ற மர்ம நபர்கள் யார்? என அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சாமிநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story