சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 9,485 பேர் 'நீட்' தேர்வு எழுதினர்-777 பேர் தேர்வு எழுதவில்லை


சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 9,485 பேர் ‘நீட்’ தேர்வு எழுதினர். இந்த தேர்வை 777 பேர் எழுதவில்லை.

சேலம்

'நீட்' தேர்வு

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் நேற்று 'நீட்' நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் கல்லூரி, வைஸ்யா கல்லூரி, செவ்வாய்பேட்டை வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி, செந்தில் பப்ளிக் பள்ளி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, விநாயகா மிஷன்ஸ், எமரால்டு வேலி பள்ளி, நாலெட்ஜ் கல்லூரி, நோட்டரி டேம் பள்ளி, காவேரி கல்லூரி உள்பட 12 மையங்களில் நேற்று மதியம் 'நீட்' தேர்வு நடந்தது.

பரிசோதனை

இந்த தேர்வு எழுதுவதற்காக காலை முதலே மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வரத்தொடங்கினர். ஆனால் அவர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சரியாக 11.30 மணி முதல் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட் சரிபார்க்கப்பட்டும், தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஹால் டிக்கெட் நகல், சுயஉறுதிமொழி படிவம், விண்ணப்பித்தபோது பதிவேற்றம் செய்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அரசு வழங்கிய ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை தேர்வு மைய அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். மேலும், செல்போன், புத்தகங்கள், காகிதங்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களை உள்ளே எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக தேர்வர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. இதுதவிர, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தேர்வு மைய நுழைவு வாசலில் முககவசம் வழங்கப்பட்டது.

9,485 பேர் எழுதினர்

சேலம் மாவட்டத்தில் உள்ள 12 மையங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 262 பேர் 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள், தேர்வு முறை கட்டுப்பாடுகள் பற்றியும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு மேல் தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 'நீட்' தேர்வு நடந்தது. மொத்தம் உள்ள 12 மையங்களில் 777 பேர் 'நீட்' தேர்வு எழுதவரவில்லை. இதனால் மீதமுள்ள 9,485 பேர் மட்டும் 'நீட்' தேர்வு எழுதினர். 'நீட்' நுழைவு தேர்வையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

'நீட்' தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதாவது, மாணவர்கள் வாட்ச், பெல்ட், ஷூ, முழுக்கை அணிந்த சட்டையும், மாணவிகள், கம்மல், மூக்குத்தி, தலை கிளிப் உள்ளிட்ட ஆபரணங்கள் எதுவும் அணிந்திருக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை முன்பே அறிந்த மாணவ, மாணவிகள் அதை கடைபிடித்து தேர்வு எழுத தயாராக வந்திருந்ததை காணமுடிந்தது. ஆனால் ஒருசிலர் மட்டும் தேர்வு மையத்திற்குள் செல்வதற்கு முன்பு தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை தங்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்து சென்றனர். குறிப்பாக ஹிஜாப், டர்பன் போன்ற கலாசார உடைகள் அணிந்திருந்தவர்கள் 12.30 மணிக்கு முன்பாக பரிசோதனை செய்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


Next Story