ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி


ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி
x

பெரம்பலூர் அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 5 பள்ளிகள், வேப்பந்தட்டையில் உள்ள 8 பள்ளிகள், வேப்பூரில் உள்ள 6 பள்ளிகள் உள்பட மொத்தம் 25 பள்ளிகளில் பணியாற்றும் 417 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை மாணவ-மாணவிகள் எளிதில் வாசிக்கவும், எழுதவும் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளை திறம்பட செய்ய வேண்டி ஆசிரியர்களுக்கு இந்த குறைதீர் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் கடந்த 7-ந்தேதி நடந்த மாநில அளவிலான பயிற்சியில் பாடாலூர் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த 2 விரிவுரையாளர்களுக்கு முதன்மையாளர் பயிற்சி வழங்கப்பட்டது. அதேபோல், மாவட்ட அளவில் 50 ஆசிரியைகளுக்கு குறு வள மைய அளவிலான முதன்மையாளர் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் முதன்மையாளர் பயிற்சி எடுத்து கொண்ட ஆசிரியர்கள் 25 குறு வள மைய பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இதில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், "தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை மாணவர்கள் எந்தவித பயம் மற்றும் தடுமாற்றம் இன்றி எளிதில் எதிர்கொள்ளும் வகையில் உங்கள் நடவடிக்கை அமைந்திட வேண்டும்" என்று ஆசிரியர்களிடம் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) குழந்தைராஜன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story