ஸ்ரீவில்லிபுத்தூரில் பலாப்பழம் விற்பனை அமோகம்


ஸ்ரீவில்லிபுத்தூரில் பலாப்பழம் விற்பனை அமோகம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தனி மவுசு

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சுவைமிகுந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவது உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்களுக்கு தனி மவுசு உண்டு.

இங்கு விளையும் பலாப்பழங்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக செல்கிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பலாப்பழங்கள் விற்பனை சரிவடைந்தது. இதனால் ஆங்காங்கே சாலையோரம் குறைந்த விலையில் பலாப்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

தள்ளு வண்டி கடை

இந்த நிலையில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. விற்பனைக்காக பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே செண்பகத்தோப்பு, கூமாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மலை அடிவாரப்பகுதிகளிலும் விளையும் பலாப்பழங்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று ஆங்காங்கே விற்பனை செய்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலாப்பழ விற்பனை ஆங்காங்கே கடைகளிலும், சாலையோரம் தள்ளுவண்டி கடைகளிலும் நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பலாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் கேரளாவில் இருந்து பழங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

விற்பனை மும்முரம்

தற்போது ஒரு கிலோ பழம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பலாச்சுளை 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிப்பு சுவை அதிகமாக இருப்பதால் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், சந்தை, பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் முடியும் நிலையில் உள்ளதால் பலாப்பழ விற்பனை சூடு பிடித்துள்ளது என வியாபாரி ஒருவர் கூறினார்.


Next Story