மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் சிக்னலுக்கு நின்ற ரெயிலின் அடியே புகுந்து தண்டவாளத்தை கடந்தவர்களால் பரபரப்பு


மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் சிக்னலுக்கு நின்ற ரெயிலின் அடியே புகுந்து தண்டவாளத்தை கடந்தவர்களால் பரபரப்பு
x

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் சிக்னலுக்கு நின்ற ரெயிலின் அடியே புகுந்து தண்டவாளத்தை கடந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுசம்பந்தமான வீடியோ வைரலானது.

மதுரை


மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் சிக்னலுக்கு நின்ற ரெயிலின் அடியே புகுந்து தண்டவாளத்தை கடந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுசம்பந்தமான வீடியோ வைரலானது.

சிக்னலுக்கு நின்ற ரெயில்

ராமேசுவரத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அங்கு பராமரிப்பு செய்யப்படும் அனைத்து ரெயில்களும் மதுரை ரெயில் பெட்டி பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதற்கிடையே, ராமேசுவரத்தில் இருந்து பனாரசுக்கு வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. பராமரிப்புக்காக இந்த ரெயில் (வ.எண்.22535) நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்தது.

மதுரை சுப்பிரமணியபுரம் ரெயில்வே தண்டவாள பகுதிக்குள் வந்த போது, சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் ெரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அந்த பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தனர். ஆனால், ரெயில் நின்றதால் அவர்களால் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து, ரெயில் பெட்டிக்கு அடியில் புகுந்து தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்தனர்.

பள்ளி, கல்லூரி செல்லும் அவசரத்தில் இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவ, மாணவிகள் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஏற்கனவே, அந்தபாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடப்பதால், உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. தண்டவாளத்தை விதிமீறி கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

அலட்சியம் கூடாது

இந்த நிலையில், நேற்று நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, விலைமதிப்பில்லாத உயிரை இழக்க நேரிடும், எனவே அலட்சியம் கூடாது என ரெயில்வே தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, பராமரிப்பு பணிகள் முடிந்து இந்த ரெயில் நேற்று மாலை 3.30 மணிக்கு மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்டு சென்றது.


Next Story