தமிழகத்தில் இதயம் காப்போம் திட்டத்தில் 1,721 பேர் பயனடைந்துள்ளனர்அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு


தமிழகத்தில் இதயம் காப்போம் திட்டத்தில் 1,721 பேர் பயனடைந்துள்ளனர்அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
x

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் இதயம் காப்போம் திட்டத்தில் 1,721 பேர் பயனடைந்து உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாகர்கோவிலில் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் இதயம் காப்போம் திட்டத்தில் 1,721 பேர் பயனடைந்து உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாகர்கோவிலில் பேசினார்.

அடிக்கல் நாட்டு விழா

குமரி மாவட்டத்தில் ரூ.5.40 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டெவி வரவேற்று பேசினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினர். மேலும் கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதுதொடர்பாக அலுவலர்களுடன் கலந்துபேசி எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் செவிலியர் கல்லூரிகள் 6 தான் இருந்தன. தற்போது மத்திய அரசிடம் பேசி 30 செவிலியர் கல்லூரி கேட்கப்பட்டது. அதில் 11 செவிலியர் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 478 தேசிய தர உறுதி சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் கடந்த ஆண்டு மட்டும் 239 கிடைத்துள்ளது. குமரி மாவட்டத்துக்கு மட்டும் 5 சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழகத்துக்கு 77 லக்சயா விருது கிடைத்துள்ளது. அதில் கடந்த ஆண்டு மட்டும் 43 கிடைத்திருக்கிறது. குமரி மாவட்டத்தில் 2 ஆஸ்பத்திரிகளுக்கு லக்சயா விருது கிடைத்துள்ளது.

கூடுதல் கட்டிடங்கள்

கோட்டார் அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடம் உள்ளது. ஆனால் 135 உள்நோயாளிகள் உள்ளனர். இதனால் இடபற்றாக்குறை உள்ளது. அடுத்த நிதி அறிக்கையில் கோட்டார் அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு 100 படுக்கைகளுடன் கூடிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.9.75 கோடியில் 8 மருத்துவ கட்டிட பணிகள் நடக்கின்றன.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டெலிகோபால்ட் கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கதிரியக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பணி அமர்த்தப்பட்டு உள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 50 படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.23.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதயம் காப்போம் திட்டம்

தமிழகத்தில் குமரி, ராணிப்பேட்டை, ஈரோடு உள்பட 5 மாவட்டங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகம் உள்ளது. காஞ்சீபுரத்தில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் கண்டறியும் பணி கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1,056 சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டு 2 மாதங்களில் மொத்தம் 1,721 பேர் பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி, விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ், மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், அணி அமைப்பாளர்கள் இ.என்.சங்கர், அருண்காந்த், பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட் தொகுத்து வழங்கினார்.


Next Story