தமிழகத்தில் தினமும் 4,500 பேர் 'மெட்ராஸ்-ஐ' கண்நோயால் பாதிப்பு: அமைச்சர் தகவல்


தமிழகத்தில் தினமும் 4,500 பேர் மெட்ராஸ்-ஐ கண்நோயால் பாதிப்பு: அமைச்சர் தகவல்
x

தமிழகத்தில் தினமும் 4,500 பேர் ‘மெட்ராஸ்-ஐ’ கண் நோயால் பாதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 'மெட்ராஸ்-ஐ' எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக சென்னை எழும்பூர் 'மெட்ராஸ்-ஐ' வார்டில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பரவும் தன்மை

'மெட்ராஸ்-ஐ' எனப்படும் கண் நோய் கடந்த 1918-ம் ஆண்டில் முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டது. இதனால் இதற்கு "மெட்ராஸ்-ஐ" என்று பெயரிடப்பட்டது. கண் இமைகளில் 'அடினோ' வைரஸ் வகை 8 அல்லது 19 நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று ஆகும். இது கண்ணின் முன் பகுதியான வெள்ளைப்படலத்தில் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு கண்நோய். இது ஒரு தொற்று வியாதி என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடிய தன்மை வாய்ந்தது.

இந்த வைரஸ் கிருமியானது எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கும். மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது தும்மல் மூலமாகவோ அல்லது கைகளால் கண்களை தொடும்போதோ இந்த தொற்று பரவுகிறது. சில நாட்களுக்கு பின் லேசான சளி, கண் இமைகளில் வீக்கம், சிவப்பு நிறமாற்றம், கண்ணீர் வடிதல், கண் உறுத்தல், காதருகில் நெறிகட்டுதல் போன்றவை ஏற்படும். பெரும்பாலும் ஒன்றன்பின் ஒன்றாக இரு கண்களிலும் தொற்று ஏற்பட்டு ஓரிரு வாரங்களில் பார்வைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் விலகிவிடும்.

தினமும் 4,500 பேர் பாதிப்பு

இந்த நோய் தாமாகவே 3 முதல் 5 நாட்களுக்குள் குணமாகும் தன்மை வாய்ந்தது. இந்த தொற்று ஏற்பட்டால் கண்களில் கைகளை வைக்காமலும், நீங்கள் பயன்படுத்தும் துண்டு, கைக்குட்டை, படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை தனிமைப்படுத்தியும், கண் கண்ணாடியை அணிந்து மற்றவர்களுக்கு பரவாமலும் தடுக்கலாம்.

மேலும் பள்ளி, கல்லூரி அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கடந்த அக்டோபர் மாத இறுதியில் பரவலாக தொடங்கப்பட்ட இந்த கண் நோயானது நாளடைவில் தீவிரமாக பரவ தொடங்கியது.

இந்த நிலையில் 5 முதல் 10 நோயாளிகள் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து தற்போது இந்த எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 750 நோயாளிகள் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழகத்தில் தினமும் 4,500 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1½ லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கண் நோய் சிகிச்சைக்கான சொட்டு மருந்து போதுமான அளவு இருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன், மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணிராஜன், எழும்பூர் கண் ஆஸ்பத்திரி இயக்குனர் பிரகாஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story