தமிழகத்தில், அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையாது
எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பில் இருக்கும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையாது என்று சீா்காழியில், டி.டி.வி. தினகரன் கூறினார்.
சீர்காழி;
எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பில் இருக்கும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையாது என்று சீா்காழியில், டி.டி.வி. தினகரன் கூறினார்.
அண்ணா பிறந்த நாள் விழா கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பொன். பாரிவள்ளல் தலைமை தாங்கினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, கழக தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோா முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் அருண் பாலாஜி வரவேற்று பேசினார். கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சிக்கு வர முடியாது
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற அண்ணாவின் வழியில் ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்கள் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ெஜயலலிதா. அண்ணா உடல் நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்த போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தயவால் முதல்- அமைச்சரானவர் கருணாநிதி.ஆனால் அவர் ஊழலை பெருக்கெடுத்து ஓட வைத்தார். அடிப்படை தொண்டர்களால் தான் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புகள் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று வியாபார நிறுவனமாக மாறிவிட்டது. புரட்சித்தலைவி அம்மா இருந்த பதவியில் தற்போது எடப்பாடி பழனிசாமி இருந்து கொண்டு கட்சியை கபளிகரம் செய்து விட்டார். அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை மக்கள் தோற்கடிப்பார்கள்.
காவிரி தண்ணீர்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது. இதனால் வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றி கவலை இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை பற்றி மட்டும் அவர் சிந்தித்து வருகிறார். இதனால் தான் அவர் தண்ணீரை பெற எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.அனைத்து குடும்பங்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு பெயர் அளவில் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
நீட்தேர்வு
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை நீக்குவோம் என தி.மு.க.வினர் கூறினா். ஆனால் அதற்காக அவர்கள் என்ன முயற்சி செய்தார்கள் என தெரியவில்லை. ஆனால் சொத்து வரி, மின்கட்டணம், முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ஆவின் பால் பொருட்கள் விலையை உயர்த்தி உள்ளனர்.நம்முடன் இருந்த செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு சென்று தற்போது எப்படி மாறிவிட்டார் என பாருங்கள். குறுக்கு வழியில் மேலே சென்றால் இப்படித்தான் ஆகும். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க. உருவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.