தமிழகத்தில் அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு பா.ஜ.க. 2-வது இடத்துக்கு வரப்பார்க்கிறது -திருமாவளவன் பேட்டி
தமிழகத்தில் அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு பா.ஜ.க. 2-வது இடத்துக்கு வரப்பார்க்கிறது என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈழத்தில் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இன்னல் பட்டு வருகின்றனர். அதில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஐ.நா.பேரவையும், சர்வதேச சமூகமும் ஈழத்தமிழர்களின் துயரை துடைக்க முன்வர வேண்டும்.
2-வது இடத்துக்கு வர...
மகேந்திர ராஜபக்சே உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் இன படுகொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு திட்டம் வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க. அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு வர பகிரங்கமாக முயற்சி எடுக்கின்றனர்.
ஜனநாயகத்துக்கு எதிரானது
தமிழ்நாடு என்பது சமூகநீதிக்கான மண். இங்கு சனாதனத்துக்கு இடமில்லை. தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து கூட்டணியோடு வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இல்லை. அது தேர்தலுடன் கலைந்து சிதறிவிட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும் எதிரானது.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.