தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகிக்கவில்லை-மதுரையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகிக்கவில்லை என மதுரையில் அளித்த பேட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகிக்கவில்லை என மதுரையில் அளித்த பேட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
அன்புமணி ராமதாஸ்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் 18 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேற்று சந்தித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் கூறினார்.
பின்னர் சிறைக்கு வெளியே அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பா.ம.க.வை சேர்ந்த 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பா.ம.க.வினரை விடுவிக்க வேண்டும். என்.எல்.சி.க்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது.
என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரியை எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது. தமிழகத்தில் இனி நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்-அமைச்சர் 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனாலும் தற்போது 3 போகம் விளையும் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் என்.எல்.சி. 3-ம் சுரங்கம் அமையுமா? அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
பா.ம.க. போராடும்
என்.எல்.சி. பிரச்சினை தமிழக மக்களின் பிரச்சினை. எனவே அங்குள்ள விளை நிலங்களை தமிழக அரசுதான் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. எனவே மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு என்.எல்.சி. விற்பனை செய்கிறது. அந்த நிறுவனத்துக்கு தமிழக அரசு ஏன் உதவியாக உள்ளது என தெரியவில்லை. என்.எல்.சி.க்கு தமிழக அரசு உதவக்கூடாது.
பா.ம.க. அரசியல் நோக்குடன் போராட்டம் நடத்தவில்லை. மண்ணுக்கும், மக்களுக்கும் பிரச்சினை என்றால் பா.ம.க. போராடும்.
ராகுல்காந்திக்கு கிடைத்த தண்டனை மிகப்பெரிய தண்டனை. சாதாரண வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது. தற்போது ராகுல்காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு விவரம் தெரியவில்லை. அதுபற்றி தெரிந்தவுடன் பேசுகிறேன். ராகுல்காந்தி வழக்கிற்கும், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகிக்கிறது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகிக்கவில்லை. 2026-ல் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் சேர்ந்து பா.ம.க. தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத்துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.