தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்; பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தமிழகத்தில் விஷச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும், திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அமைத்தும் செயல்படாமல் உள்ளது. அதனை நகராட்சி நிர்வாகம் முழுமையாக கைவிட வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாக குடிநீருடன் நிலத்தடி நீரும் கலந்து வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும், மில்லர்புரத்தில் உள்ள பூங்கா பூட்டியே கிடக்கிறது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், மணிமுத்தாறு அணை தென்கால் ரீச் 4-ல் 10-வது மடை வரை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் நவோதயா கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பா.ஜனதா பொருளாளர் சண்முகசுந்தரம், பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், முன்னாள் மாவட்ட தலைவர் பால்ராஜ், வக்கீல் சந்தணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.