தமிழகத்தில்பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்:சிவசேனா கட்சி கோரிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என கோரி வரும் நிலையில் இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும், உயிர்பலியும் வேதனை அளிக்கிறது. அடுத்த தலை முறையினரான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் எதிர்கால வாழ்வை இழந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அது மட்டுமில்லாமல் மதுவினால் அதிகமான இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் நல்வாழ்வினை இழந்து நிற்கின்றனர். கல்வி அறிவு மிகுந்த தமிழ்நாடு இன்றைக்கு மது போதைக்கு அடிமையாகி சீரழிவது மிகவும் வேதனைக்குரியது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் எதிர்காலம் நலன்கருதி தமிழக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.