தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

ஜல்ஜீவன் திட்டத்தில் முதலிடம்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகம் முழுவதும் குடிநீர் இணைப்புகள் வழங்க 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கப்பட்டு 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள தொகைக்கு அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் துரிதமாக பணிகள் நடந்து வருவதன் காரணமாக நாட்டில் 26-வது இடத்தில் இருந்த தமிழகம் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

தாமிரபரணியில் கழிவுநீர்

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நகர்ப்புற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கிராமப்புறங்களில் இருந்து ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அனைத்து திட்டப்பணிகளும் முடிவடைந்த பின்னர் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும்.

தமிழகத்தில் குடிநீருக்கு முக்கியத்துவம் தந்து திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கூரை இடிந்த விவகாரம்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பியவர்கள், சென்னை விமான நிலையம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் கட்டப்பட்டது. அங்கு 126 முறை கண்ணாடிகள் சேதம் அடைந்தன. அதை எல்லாம் கேள்வி கேட்பது இல்லை.

வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு கட்டமைப்பில் சிறு தவறு நடந்திருக்கலாம். அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story