தஞ்சையில், கோழி இறைச்சி விலை திடீர் சரிவு; கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்தது


தஞ்சையில், கோழி இறைச்சி விலை திடீர் சரிவு; கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்தது
x

தஞ்சையில், கோழி இறைச்சி விலை திடீர் சரிவு; கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்தது

தஞ்சாவூர்

தஞ்சையில், கோழி இறைச்சியின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து ள்ளதால் அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது ஆடி மாதம் என்பதால் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

அசைவ பிரியர்கள்

அசைவப்பிரியர்கள் விரும்பி சாப்பிடும் வகைகளுள் ஒன்று கோழி இறைச்சி. மேலும் இது மீன், நண்டு, இறால், ஆட்டு இறைச்சியை விட சற்று விலை குறைவாக இருப்பதால் இதனை அதிகமாக விரும்பி வாங்குவார்கள். கோழி இறைச்சியின் விலை தற்போது ஒரு நாளைக்கு ஒரு விலை விற்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாமக்கல், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிகள் விற்பனைக்கு அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. தஞ்சையில் கடந்த மாதம் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது. உயிர்க்கோழி ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்தது

அதன் பின்னர் நாளுக்கு நாள் விலை குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று தஞ்சையில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான கடைகளில் ரூ.140-க்கு விற்கப்பட்ட நிலையில் ஒரு சில கடைகளில் கிலோ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. உயிர்க்கோழி கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பறவை காய்ச்சல், கொரோனா ஊரடங்கு காலங்களில் கோழி இறைச்சி விலை குறைவாக காணப்பட்டது. தற்போது மீண்டும் விலை குறைந்து வருகிறது. அதாவது ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்து காணப்படுகிறது. இந்த விலை குறைவு அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்துள்ளது.

ஆடி மாதம்

தற்போது ஆடி மாதம் பிறந்து 5 நாட்கள் ஆகி விட்டது. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் பெண்கள் பெரும்பாலும் விரதம் இருந்து வழிபாடுவா்கள். இதனால் இறைச்சி விற்பனை குறைந்து காணப்படும். விலை குறைந்தாலும் கோழி இறைச்சி விற்பனையும் குறைவாகவே உள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது ஆடி மாதம் என்பதால் வீடுகளில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள். இதன் காரணமாக அசைவம் சாப்பிடுவது குறையும். வழக்கமாகவே ஆடி மாதங்களில் கோழி இறைச்சி விலை மற்ற மாதங்களை விட குறைந்து காணப்படும். தற்போது அதிக அளவு விலை குறைவாக இருந்தாலும், விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளது" என்றனர்.


Related Tags :
Next Story