தஞ்சையில், வணிகர்கள் கடை அடைப்பு


தஞ்சையில், வணிகர்கள் கடை அடைப்பு
x

தஞ்சையில், வணிகர்கள் கடை அடைப்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தையில் பணம் கொடுக்க மறுத்த வியாபாரிகளை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைகள் அடைப்பு

தஞ்சை கரந்தையில் மளிகைகடை நடத்தி வரும் செந்தில்வேல், மருந்துக்கடை ஊழியர் முருகானந்தம் மற்றும் ஒரு வியாபாரியை குடிபோதையில் அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மர்ம நபர்கள் அந்த பகுதியில் உள்ள பல கடைகளிலும் இது போன்று மிரட்டி பணத்தை பறித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பிற வணிகர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று காலை வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

பின்னர் அவர்கள் கடை வீதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநகர தலைவர் வாசுதேவன், செயலாளர் கந்தமுருகன், கரந்தை வணிகர் சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் பத்மநாபன் ஆகியேர் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் வணிகர் சங்கங்களின் மாநகர தலைவர் வாசுதேவன் கூறுகையில், "தஞ்சையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் கஞ்சாவுக்கு அடிமையான ரவுடிகள், கடைகளுக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து செல்கிறார்கள். இந்த நிலையில் பணம் கொடுக்க மறுத்ததால் கரந்தை பகுதியில் 3 வியாபாரிகளை அரிவாளால் வெட்டி உள்ளனர்.

நடத்த முடியவில்லை

வியாபாரி செந்தில்வேலை அரிவாளால் வெட்டியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் 2 பேர் பிடிபட்டுள்ளனர். இன்னும் 6-க்கும் மேற்பட்டவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களையும் கைது செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்களால் வணிகர்கள் கடைகளை நடத்த முடியவில்லை. பீதியுடன் காணப்படுகிறார்கள். எனவே வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். இதில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்"என்றார்.


Next Story