தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாரமங்கலம்,
கலெக்டர் ஆய்வு
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பவளத்தானூர் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் குருக்குப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பவளத்தானூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.12.51 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தினார்.
இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
ரூ.43.06 கோடியில் பணிகள்
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2021-22 மற்றும் 2022-23 நிதி ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.21 கோடி மதிப்பீட்டிலான 100 பணிகளும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.7.80 கோடியில் 314 பணிகளும், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.11.24 கோடியில் 685 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.12 கோடியில் 46 பணிகளும், புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.04 கோடியில் 5 பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில் 19 பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79 லட்சத்தில் 8 பணிகளும், பள்ளி கட்டிடங்கள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் 7 பணிகளும், இலங்கை தமிழர் மறுவாழ்வு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12.24 கோடியில் 244 பணிகளும் என மொத்தம் ரூ.43.06 கோடி மதிப்பீட்டில் 1,428 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, உதவிப் பொறியாளர்கள் கண்ணன், சீனிவாசன், குருக்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.