தஞ்சையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.க.வினர் 400 பேர் கைது


தஞ்சையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.க.வினர் 400 பேர் கைது
x

தஞ்சையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.க.வினர் 400 பேர் கைது

தஞ்சாவூர்

தஞ்சையில், எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி.யை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.க.வினர் 400 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

தஞ்சை ரெயில் நிலையத்தில் கடந்த 6-ந்தேதி தேதி நடந்த அம்ரித் பாரத் நிலைய திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரையும், பா.ஜ.க.வினரையும் அவதூறாகப் பேசியதாக கூறி ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து தஞ்சை ரெயில் நிலையத்தில் நேற்று மதியத்துக்கு பிறகு தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆஷிஷ்ராவத்(தஞ்சை), சுரேஷ்குமார்(திருவாரூர்) மேற்பார்வையில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தி.மு.க. அச்சுறுத்தல்

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்பட ஏராளமானோர் ரெயிலடிக்கு நேற்று மாலை வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பா.ஜ.க.வினரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, கருப்புமுருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு போலீசாரிடம் அனுமதி கேட்டு 6 நாட்கள் ஆகிறது. ஆனால் நேற்று முன்தினம் வரை அனுமதி வழங்கப்படும் எனக் கூறிய போலீசார் நேற்று காலை அனுமதி கிடையாது என்றும், கைது செய்வோம் எனவும் கூறினர். தி.மு.க. அரசின் அச்சுறுத்தலுக்கு போலீசார் பணிந்து விட்டதாக தெரிகிறது. நாங்கள் கோர்ட்டில் அனுமதி பெற்று தேசிய அளவில் உள்ள நிர்வாகிகளை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

400 பேர் கைது

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தொல்காப்பியர் சதுக்கம், கோடியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட மாவட்ட, மாநகர எல்லைகள் வழியாக வாகனங்களில் வந்த பா.ஜ.க.வினரை அந்தந்த பகுதியில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதேபோல் தஞ்சை மாநகருக்குள்ளும் பலவேறு இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் 400 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story