தஞ்சையில், அரிசி விலை 'கிடுகிடு' உயர்வு


தஞ்சையில், அரிசி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 24 July 2023 7:48 PM GMT (Updated: 25 July 2023 12:22 PM GMT)

தஞ்சையில் அரிசி விலை கிடுகிடுவென உயர்வால் கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சையில் அரிசி விலை கிடுகிடுவென உயர்வால் கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

அரிசி

உலகில் இருக்கின்ற மக்களில் சரிபாதி அளவு மக்களின் அன்றாட பிரதான உணவு தானியமாக அரிசி விளங்குகிறது. பொதுவாக இந்தியர்களின் உணவு முறையில் பெரும்பாலும் அரிசி முதல் இடத்தை பிடித்துள்ளது. அரிசி பெரும்பாலும் ஆசிய நாடுகளிலேயே அதிகம் பயிரிடப்படுகின்றன. அரிசியில் பல வகைகள் உள்ளன. நம் இந்திய நாட்டில் குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் பல வகையான அரிசிக்காக நெல் பயிரிடப்படுகின்றன.

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு விதமான நிறம், ருசி, மருத்துவ குணங்கள் போன்றவை இருக்கின்றன. அந்த வகைகளுக்கு ஏற்ப விலை நிலவரமும் வேறுபட்டு காணப்படும். சந்தைகளில் பெரும்பாலும் அரிசியின் ரகத்திற்கு ஏற்ப விலை நிலவரம் இருக்கும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போலவே அரிசி விலை நிலவரத்திலும் ஏற்றத்தாழ்வு இருக்கும். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

உயர்வு

இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் எல்லா ரக அரிசியும் விலை உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.6 முதல் அதிகபட்சமாக ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

இட்லி அரிசியான குண்டு அரிசி, கோ-43 ரக அரிசி கிலோ ரூ.34-க்கு விற்பனையானது. ஆனால் இந்த அரிசி கிலோவுக்கு ரூ.6 உயர்ந்து தற்போது ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில பகுதிகளில் ரூ.43 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மணச்சநல்லூர் அரிசி 26 கிலோ மூட்டை ரூ.1300 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது மணச்சநல்லூர் மூட்டை ரூ.1500-க்கு விற்பனையாகிறது. கர்நாடக பொன்னியானது தரம் வாயிலாக விலை உயர்ந்துள்ளது.

பாஸ்மதி

அதாவது கர்நாடக பொன்னி அரிசி 26 கிலோ மூட்டை ரூ.1100-க்கு விற்றது. தற்போது விலை உயர்ந்து ரூ.1,300-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.1,300-க்கு விற்ற பொன்னிஅரிசி மூட்டை ரூ.1,500-க்கும், ரூ.1,350-க்கு விற்ற பொன்னிஅரிசி மூட்டை ரூ.1,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.36-க்கு விற்பனையான ஒரு கிலோ பச்சரிசி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.95-க்கு விற்பனையான ஒரு கிலோ பாஸ்மதி அரிசி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சீரக சம்பா, கிச்சடி சம்பா, கருப்பு கவுனி, வரகுஅரிசி, சாமை அரிசி என அனைத்து ரக அரிசியும் விலை உயர்ந்துள்ளது.

விலை உயர்வு ஏன்?

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் நெல், அரிசி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் பால்ராஜ் கூறும்போது, கர்நாடகம், ஆந்திராவில் இருந்து அதிகஅளவு தமிழகத்திற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது அசாம், குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு அரிசி கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்திற்கு அரிசி வரத்து குறைந்துள்ளது. மேலும் பங்களாதேஷிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. கர்நாடகம், ஆந்திராவில் இருந்து அரிசி வரத்து அதிகமாக இருந்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. தற்போது அரிசி ஏற்றுமதிக்கு மத்தியஅரசு தடை விதித்து இருக்கிறது. இதனால் அரிசி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்படாததால் பாஸ்மதி அரிசி மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது என்றார்.


Next Story