தஞ்சையில், ஆற்றுக்குள் பொங்கும் சாக்கடை கழிவுநீர்; சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்


தஞ்சையில், ஆற்றுக்குள் பொங்கும் சாக்கடை கழிவுநீர்; சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்
x

தஞ்சையில், ஆற்றுக்குள் பொங்கும் சாக்கடை கழிவுநீர்; சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர்

தஞ்சையில் கல்லணைக்கால்வாய் ஆற்றுக்குள் சாக்கடை நீர் பல இடங்களில் பொங்கி வழிகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கல்லணைக்கால்வாய்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுகளுள் ஒன்று கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆறு. இந்த ஆற்றை பிணந்தின்னி ஆறு என்றும் கூறுவது உண்டு. ஆண்டு தோறும் இந்த ஆற்றில் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த ஆறு தஞ்சை மாவட்டம் தொடங்கி தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்கள் வரை பாசன வசதி அளிக்கிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இந்த ஆறு செல்கிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இந்த ஆறு மூலம் 2½ லட்சம் ஏக்கர் வரையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் வரையும் பாசன வசதி பெறுகிறது.

தஞ்சையின் மையப்பகுதி வழியாக....

இந்த ஆறு தஞ்சை பெரியகோவில் அருகே என தஞ்சை நகரின் மையப்பகுதி வழியாக செல்கிறது. தஞ்சை மாநகரில் பல இடங்களில் சாக்கடை வாய்க்கால் கழிவுநீர் இந்த ஆற்றுக்கு அடியில் செல்கிறது. குறிப்பாக தஞ்சை இர்வீன்பாலம் பகுதி மற்றும் ஜெயராம் மகால் அருகே, 20 கண் பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆற்றுக்கு அடியில் கழிவுநீர் செல்வதற்கான வசதி செய்யப்பட்டு கழிவுநீர் செல்கிறது.

பாதாள சாக்கடை திட்டம் தஞ்சை மாநகரில் செயல்படுத்தப்பட்ட பின்னர் பல இடங்களில் இருந்து வரும் கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் கல்லணைக்கால்வாய் மேல் நடைபாலம் அமைக்கப்பட்டு அதன் மீது ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு சமுத்திரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆற்றுக்குள் பொங்கும் கழிவுநீர்

ஆனால் ஆற்றுக்கு அடியில் செல்லும் சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆங்காங்கே சில இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் இருந்து நாகை சாலையில் உள்ள வண்டிக்காரத்தெரு பாலம் வரையிலும் ஆற்றில் தண்ணீர்தேங்கி காணப்படுகிறது.

தற்போது இந்த பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. காரணம் ஆற்றங்கரையின் மேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தின் அருகே வரும் சாக்கடைகழிவு நீர் ஆற்றுக்கு அடியில் செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டு 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியேறுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் சாக்கடை கழிவுநீர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரை வரை வரிசையாக கழிவுநீர் பொங்குவதை காண முடிகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

இது குறித்து கல்லணைக்கால்வாய் கரையில் உள்ள சிந்துநகரை சேர்ந்த ஜெயக்குமார் கூறுகையில், தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் கல்லணைக்கால்வாக்கு அடியில் செல்கிறது. இதில் எம்.கே.மூப்பனார் சாலைக்கும், வண்டிக்காரத்தெரு சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் கழிவுநீர் செல்லும் பகுதியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. ஏற்கனவே கிடக்கும் தண்ணீருடன் கழிவுநீரும் சேருவதால் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் சாக்கடை நீர் தொடர்ந்து வெளியேறுகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் விடும் போது கழிவு நீர் சேர்ந்து செல்வதால் பயிர்கள் பாதிப்படையும், நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்த உடைப்பை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்று அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

கலங்கலாக வெளியேறுகிறது

சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கூறுகையில், தஞ்சை மாநகரில் பல இடங்களில் அவ்வப்போது பாதாள சாக்கடை குழியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தற்போது ஆற்றுக்குள் சாக்கடை கழிவுநீர் வெளியேறுகிறது. அதுவும் பல இடங்களில் சாக்கடை நீர் கலங்கலான நிலையில் வெளியேறுகிறது. ஏற்கனவே தேங்கி கிடக்கும் தண்ணீரில் சாக்கடை நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆற்றுக்கு அடியில் கழிவுநீர் செல்லும் வழித்தடத்தில் இது போன்று அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் போது விவசாயமும் பாதிக்கப்படும். தேங்கி கிடக்கும் தண்ணீரை கால்நடைகள் குடிக்கும் போதும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே இது போன்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story