தரங்கம்பாடியில், பொலிவிழந்து வரும் வரலாற்று சின்னங்கள்
தரங்கம்பாடியில் வரலாற்று சின்னங்கள் பொலிவிழந்து வருகின்றன. அங்கு சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தரங்கம்பாடியில் வரலாற்று சின்னங்கள் பொலிவிழந்து வருகின்றன. அங்கு சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தரங்கம்பாடி வரலாறு
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளை காலனி நாடுகளாக மாற்றி வர்த்தகத்துக்கு பயன்படுத்தி வந்த கால கட்டத்தில் தமிழகத்தில் இருந்த கடல்சார் வணிக நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்தது தரங்கம்பாடி.
டேனிஷ் (டென்மார்க்) கிழக்கு இந்திய கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அங்கிருந்து டேனிஷ் அட்மிரல் ஓவ் கிட் (1594-1660) என்பவர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து தங்கிய இடம் வங்கக்கடலோரம் அமைந்துள்ள தரங்கம்பாடி.
தங்க இலை ஒப்பந்தம்
முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், நாகையின் (காயிதே மில்லத் மாவட்டம்) ஒரு பகுதியாகவும் இருந்த தரங்கம்பாடி தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தின் அங்கமாக உள்ளது. அட்மிரல் ஓவ் கிட், தஞ்சையை ஆண்ட மன்னர் விஜய ரெகுநாத நாயக்கருடன் 1620-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். ஆண்டு வாடகை ரூ.3 ஆயிரத்து 111 என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டை கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதற்கு டேனிஷ் அரசு அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது.
தற்போது இதன் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்று சின்னங்கள்
தரங்கம்பாடியில் 1620-ம் ஆண்டு கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை வரலாற்று சின்னமாக திகழ்கிறது. அதேபோல 13-ம் நூற்றாண்டில் அதாவது 1305-ம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் மன்னனால் கட்டப்பட்ட மாசிலா மணிநாதர் கோவில், 1701-ம் ஆண்டு கட்டப்பட்ட சீயோன் தேவாலயம், 1718-ம் ஆண்டு ஜெர்மன் தேசத்தில் இருந்து வந்து தமிழறிஞராக மாறிய பார்த்தலேமியு சீகன்பால்க் என்பவரால் கட்டப்பட்ட புதிய எருசலேம் தேவாலயம், 1784-ம் ஆண்டு கட்டப்பட்ட டேனிஷ் கவர்னர் பங்களா, கேட்ட ஹவுஸ், முகில் டிரிப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகீலிங் மாளிகை, 1792-ம் ஆண்டு கட்டப்பட்ட தரங்கம்பாடி நகர நுழைவாயில் போன்றவை வரலாற்றை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளன. ேடனிஷ் கோட்டையை ேபால பிரம்மாண்ட கட்டிட அமைப்புகள் பல தரங்கம்பாடியில் இருப்பதால் தரங்கம்பாடி வரலாற்று சின்னங்களின் நகரம் என அழைக்கப்படுகிறது.
உப்புக்காற்றால் பொலிவிழக்கும் கோட்டை
கடலில் இருந்து வீசும் உப்புக்காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் கம்பீரமான டேனிஷ் கோட்டை தற்போது பொலிவிழந்து வருகிறது. இதேபோல் தரங்கம்பாடியில் உள்ள பிற வரலாற்று சின்னங்களும் பொலிவிழந்து வருவதால் வரலாற்று ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து கோட்டையை பழமை மாறாமல் புதுப்பித்து இயற்கை பேரிடரில் இருந்து காப்பாற்ற வேண்டும். கடற்கரை பகுதியில் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ேவண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் திருட்டு போகிறது. இதை கண்காணிக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.