விபத்தில் லாரி டேங்க் உடைந்து வீணாக ஓடிய டீசல்
சூலூர் புதிய பஸ் நிலையம் அருகே 2 லாரிகள் மோதிக்கொண்டன. இதில் ஒரு லாரியின் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர்
சூலூர் புதிய பஸ் நிலையம் அருகே 2 லாரிகள் மோதிக்கொண்டன. இதில் ஒரு லாரியின் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரிகள் மோதி விபத்து
அரியலூரில் இருந்து கேரளாவை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை சேலத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை இந்த லாரி கோவை மாவட்டம் சூலூர் புதிய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது நாமக்கல்லில் இருந்து சூலூர் நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி சூலூர் புதிய பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியும், சரக்கு லாரியும் மோதிக்கொண்டன.
டீசல் டேங்க் உடைப்பு
இந்த விபத்தில் சரக்கு லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் வழிந்தோடியது. அப்போது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் டீசல் தீ பிடித்து விடும் என நினைத்து அங்கிருந்து பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு படையினர் சாலையில் வழிந்தோடிய டீசல் மீது மணலை கொட்டி தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் டீசல் டேங்க் உடைந்த சரக்கு லாரி மற்றும் டேங்கர் லாரி ஆகியவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.