வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடன் வசதி
வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அறுவடைக்கு பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகளுக்கும், சமுதாய வேளாண் அமைப்புக்கும் தேவைப்படும் முதலீடுகளுக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால கடனுக்கு வட்டி தள்ளுபடி மற்றும் கடனுக்கான உத்தரவாதம் போன்ற வசதிகள் செய்து தரப்படும். இத்திட்டம் வருகிற 2030-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், குளிர்பதன வசதிகள், முதன்மைபடுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள் இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, காளான் வளர்ப்பு, நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.
3 சதவீத வட்டி தள்ளுபடி
இந்த திட்டத்தில், தனிநபர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்வகை கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியோர் பயன் பெற தகுதி உடையவர்கள், இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு மற்றும் குறு விவசாய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்திரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும்.
இத்திட்டத்தின் கீழ், மொத்தமாக தமிழ்நாட்டிற்கு ரூ.5,990 கோடி அளவுக்கு கடன் வசதி செய்து தந்து வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், திருவாரூர் வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) மற்றும் வேளாண் விற்பனை வேளாண் வணிகத்துறை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.