ஆண்டிப்பட்டி சந்தையில்கொத்தமல்லி விலை வீழ்ச்சி:கிலோ ரூ.3-க்கு விற்பனை
ஆண்டிப்பட்டி பகுதியில் கொத்தமல்லி தழை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார இ்டங்களான கண்டமனூர், கோவிந்தநகரம், தேக்கம்பட்டி, கணேசபுரம், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி பகுதிகளில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான கொத்தமல்லி அதிகமான விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் கொத்தமல்லித் தழைகள் ஆண்டிப்பட்டி, தேனி, சின்னமனூர் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சந்தையில் ஏல அடிப்படையில் கொத்தமல்லிக்கு விலை நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் கொத்தமல்லி வரத்து அதிகரித்ததால் கொத்தமல்லி கிலோ ரூ.3-க்கு ஏலம் போனது. கடந்த மாதம் கிலோ ரூ.18 முதல் 20 வரை விற்பனையானது. தற்போது கொத்தமல்லி ரூ.3-க்கு விற்பனையானதால், இந்த விலை அறுவடை செலவுக்கு கூட போதுமானதாக இருக்காது.
மேலும் வறட்சியான பகுதிகளில் குறைவான இடத்தில் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவழித்து சொட்டுநீர் பாசனம் மூலம் கொத்தமல்லி பயிரிடப்பட்டுள்ளது. விலை குறைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.