கேலரி மேற்கூரை இடிந்த பகுதியில் சென்னை அதிகாரிகள் குழு ஆய்வு


கேலரி மேற்கூரை இடிந்த பகுதியில் சென்னை அதிகாரிகள் குழு ஆய்வு
x

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை இடிந்த இடத்தில் சென்னை அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 நாட்களில் விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை இடிந்த இடத்தில் சென்னை அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 நாட்களில் விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

மேற்கூரை இடிந்தது

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அங்குள்ள கேலரி (பார்வையாளர் மாடம்) புதுப்பிக்கப்பட்டது. அதன் மீது இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது வ.உ.சி. மைதான ஒரு பகுதி கேலரியின் மீது அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. இந்த கட்டுமானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. அதற்குள் இடிந்து விழுந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அதிகாரிகள் குழு

இந்த நிலையில் சேதம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, நகராட்சி நிர்வாக துறைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் பாண்டுரெங்கன் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் நேற்று நெல்லைக்கு வந்தனர். அவர்கள் வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை சரிந்து விழுந்து கிடக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அந்த மேற்கூரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தூண் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தூண் ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் அளவு, தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் மற்றொரு பகுதியில் இடியாமல் நிற்கும் கேலரி மேற்கூரையையும், அதன் உறுதித்தன்மையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த குழுவினர் விரைவில் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்

இந்த நிலையில் மேற்கூரை இடிந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் 7 நாட்களுக்குள் மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து, விபத்து குறித்து உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆய்வுக்குழுவினரின் அறிக்கையின்படி ஒப்பந்ததாரரின் சொந்த செலவில் மேற்கூரையை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஆணை வழங்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story