தொழிலதிபரை கடத்திய வழக்கில்3 வாலிபர்கள் கைது
தொழிலதிபரை கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காரில் கடத்தல்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அதிசயம் (வயது 68). இவர், கோழிக்கறி மற்றும் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவையில்லாமல் வாழை மற்றும் திராட்சை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் ஆனைமலையன்பட்டியில் உள்ள திராட்சை ேதாட்டத்திற்கு சென்று ராயப்பன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் அதிசயம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து கடத்தி சென்றனர். இதுகுறித்து அதிசயத்தின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொழிலதிபர் மீட்பு
அதன்பேரில் ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து போலீசார் ஜீப்பில் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்ம கும்பல் ஓடும் காரில் இருந்து அதிசயத்தை கீழே தள்ளி விட்டனர். பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றனர்.
காரில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அதிசயத்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேர் கைது
அந்த காரை வடுகப்பட்டி சாலையில் போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே அந்த காரில் இருந்த 5 பேரில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். மற்ற 3 பேரை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பிரபு (31), அதே பகுதியை சேர்ந்த கவுசிகன் (22), திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த கருப்பசாமி என்ற அஜித் (23) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பணத்துக்காக அதிசயத்தை கடத்தியதாகவும், அதற்கு ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் உதவியாக இருந்ததாகவும் கைதான வாலிபர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளிக்கு தொடர்பா?
இதற்கிடையே அதிசயத்தின் தோட்டத்தில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கரலிங்கம் (55) என்பவருக்கு கடத்தலில் தொடர்பு ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கரலிங்கத்தின் செல்போனை கைப்பற்றி அதில் பதிவான எண்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
காரில் இருந்து தப்பியோடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் இந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.