கொலை முயற்சி வழக்கில்2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை:தேனி கோர்ட்டு தீர்ப்பு


தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:46 PM GMT)

கொலை முயற்சி வழக்கில் 2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி

கொலை முயற்சி

போடி திருமலாபுரம் ஒழுகால்பாதையை சேர்ந்தவர் சுருளிராஜ் (வயது 47). கூலித்தொழிலாளி. கடந்த 2013-ம் ஆண்டு அவர் தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் பேசி முடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி சுருளிராஜ் தனது சைக்கிளில் ஒழுகால்பாதை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற ஒண்டிவீரன் (33), அவருடைய நண்பர் போடி சர்ச் தெருவை சேர்ந்த சுகுமார் (30), கார்த்திக்கின் தாய் சுஜாதா (53) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து, சுருளிராஜை வழிமறித்தனர்.

அப்போது கார்த்திக், தான் காதலித்த பெண்ணை எப்படி உனது தம்பிக்கு பேசி முடிக்கலாம் என்று சுருளிராஜிடம் தகராறு செய்தார். மேலும் அவரை சுகுமார் பிடித்துக் கொள்ள, கார்த்திக் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

7 ஆண்டு சிறை

இதில் படுகாயம் அடைந்த சுருளிராஜ் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த கொலை முயற்சி குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கார்த்திக், சுகுமார், சுஜாதா ஆகிய 3 பேர் மீதும் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக், சுகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.

கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக், சுகுமார் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் சுஜாதா மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story