ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில்மேலும் ஒருவர் கைது


ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில்மேலும் ஒருவர் கைது
x

வணிக நிறுவனம் நடத்தி ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

அதிக வட்டி தருவதாக...

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தனவேல் (வயது 42). இவருக்கு, திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம்(57) என்பவர் பழக்கமானார். தர்மலிங்கம் மூலம் தனவேலுக்கு கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர் பழக்கமானார். அப்போது அவர் தோவாளை தாலுகா எறச்சகுளத்தில் ஜே.என்.எப். வர்த்தகம் என்ற நிறுவனம் வெளிநாட்டிற்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்து வருவதாகவும், அதில் அதிக லாபம் இருப்பதாகவும், மேற்படி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டியை தருவார்கள் என்றும் நீங்களும் மேற்படி நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கும் அதிக வட்டி வரும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

மோசடி

இதனை நம்பிய தனவேல் மற்றும் பலர் சுமார் ரூ.11 கோடி வரை கடந்த 11.2.2022-ம் தேதி முதல் அவ்வப்போது நிறுவனத்தின் முகவரான ஜெயபால், கணக்காளரான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா, எறச்சகுளம் விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் என்பவரது மனைவி ராதிகா(28), முகவர் தர்மலிங்கம் ஆகிய 3 பேரின் வங்கி கணக்குகளுக்கும் அனுப்பி வந்துள்ளனர்.

அதற்கான வட்டியை அவர்கள் மாத மாதம் பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் வட்டி தொகை வராத காரணத்தினால் ஜெயபாலிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர் சரியான காரணம் சொல்லாமல் தனவேல் உள்பட அவர்களின் செல்போன் அழைப்பினை தவிர்த்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலும், நஷ்டமும் அடைந்த முதலீட்டாளர்கள் தனவேல், சிவா, குமார், பிரபாகரன் மற்றும் அவரிடம் பணம் அளித்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

மற்றொருவருக்கு வலைவீச்சு

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை கடந்த 23-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியிருந்த தர்மலிங்கத்தை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முதலீட்டாளர்களின் பணமும் திரும்ப பெற்று தரப்படும் என்று போலீசாா் தெரிவித்தனர்.


Next Story