வாலிபர் கொலை வழக்கில்அனைவரையும் கைது செய்யக்கோரிஉறவினர்கள் மறியல்


வாலிபர் கொலை வழக்கில்அனைவரையும் கைது செய்யக்கோரிஉறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:45 PM GMT)

பெரியகுளம் அருகே வாலிபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

வாலிபர் கொலை

பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தை சேர்ந்த விஜயராஜ் (வயது 26). பெரியகுளம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சூரியபிரகாஷ், அருண்குமார். விஜயராஜிக்கும், இவர்கள் 2 பேருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான பேச்சுவார்தை பெரியகுளம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது சூரியபிரகாஷ், அருண்குமார் தரப்பில் அவர்களது நண்பர்கள் ரஞ்சித், பிரதீப், சசிபிரபு, முத்துராஜ்பிரதீப் ஆகியோரும் இருந்தனர். பேச்சுவார்த்தையின் போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் விஜயராஜை, சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து தலையில் தாக்கி பின்பு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பெரியகுளம் போலீசார் விஜயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூர்யபிரகாஷ், அருண்குமார், ரஞ்சித், சசிபிரபு, பிரதீப், முத்துராஜ் பிரதீப் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 4 பேரை கைது செய்தனர்.

உறவினர்கள் மறியல்

இந்நிலையில் விஜயராஜின் உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தேனி-மதுரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விஜயராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்தனர். அனைவரையும் கைது செய்த பின்னரே உடலை வாங்குவோம் என்று கூறிவிட்டு அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story