முதியவர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: தேனி கோர்ட்டு தீர்ப்பு


முதியவர் கொலை வழக்கில்  தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை:  தேனி கோர்ட்டு தீர்ப்பு
x

முதியவர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி

முதியவர் கொலை

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 65). கடந்த 2017-ம் ஆண்டு இவர், தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த காராமணி (63) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். கூலித்தொழிலாளியான அவர் தனது மோட்டார் சைக்கிளை பாதையை மறித்து நிறுத்தினார். அதைப் பார்த்த அய்யாத்துரை, பாதையை மறித்து நிறுத்தினால் நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறினார். இதனால், அவரிடம் காராமணி வாக்குவாதம் செய்தார்.

அப்போது அவர், அய்யாத்துரையை கீழே தள்ளினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

10 ஆண்டு சிறை

இந்த சம்பவம் குறித்து அய்யாத்துரையின் மகள் தங்கத்தாய் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து காராமணியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சஞ்சய் பாபா இன்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் காராமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து காராமணியை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story