மாவட்டத்தில், இரவில் காற்றுடன் குளிர்வித்த மழை


மாவட்டத்தில், இரவில் காற்றுடன் குளிர்வித்த மழை
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில், காலையில் 103.64 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், இரவில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் பரவலாக மழை பெய்து குளிர்வித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

கடலூர்

கடலூர்

வெயில்

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்திய நிலையில், அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தற்போது ஜூன் மாதம் ஆரம்பித்து பள்ளிகள் தொடங்கிய நிலையிலும், வெயில் கோடை காலத்தை தாண்டி வறுத்தெடுத்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி சூரியன் சுட்டெரித்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்த பிறகே இதன் தாக்கும் குறையும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் சில நாட்களில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் வெப்பச்சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்தது. இருப்பினும் தற்போது பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் மூலம் 103.64 டிகிரி வெயில் பதிவானது.

மழை

மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7.30 மணி அளவில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றால் குப்பைகள் காற்றில் பறந்தன. இதனால் சாலைகளில் குப்பைகள் அதிகமாக கிடந்தது. சற்று நேரத்தில் லேசான மழை பெய்தது. அதேவேளை காடாம்புலியூர், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, நடுவீரப்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வந்த மக்களுக்கு, இந்த மழை சற்று ஆறுதலை அளித்தது.

ஸ்ரீமுஷ்ணத்தில்

ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இரவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல மழையின் வேகமும் அதிகரித்தது. இதனால் சாலை, கடை வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது.

மின் தடை

வடலூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இடி,மின்னலுடன் மிதமானமழை பெய்தது. இதனால் இரவு 7 மணி முதல் இரவு 9.30 மணிவரை மின் தடை ஏற்பட்டதால் வடலூா் பகுதி இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story