ஆப்பக்கூடலில் ஓட்டலில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
ஆப்பக்கூடலில் உள்ள ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் கருகி நாசமடைந்தன.
அந்தியூர்
ஆப்பக்கூடலில் உள்ள ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் கருகி நாசமடைந்தன.
ஓட்டல் தீப்பிடித்தது
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடலை சேர்ந்தவர் காந்திமதி. இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஓட்டலின் சமையல் அறைக்குள் இருந்து அதிக அளவில் புகை வெளியேறுவதாக பக்கத்து கடைக்காரர்கள் தொிவித்தனர். இதனால் காந்திமதி சமையல் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தீப்பற்றி எரிந்தது. உடனே காந்திமதியும், ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களும் வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். சில நொடிகளில் ஓட்டல் முழுவதும் தீ பரவி எரிந்தது.
இதுகுறித்து உடனே பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகே தீ கட்டுக்குள் வந்தது.
அசம்பாவிதம் தவிர்ப்பு
எனினும் ஓட்டலுக்குள் இருந்த சமையல் பாத்திரங்கள், மளிகை பொருட்கள், மேஜை, நாற்காலிகள், வங்கி கணக்கு புத்தகம், காந்திமதியின் ஆதார் அட்டை அனைத்தும் கருகி நாசமடைந்தன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள் முதலில் சமையல் அறைக்குள் சென்று கியாஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தினர். அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஓட்டலில் சமைக்கும்போது தீ பற்றியதா? அல்லது மின் கசிவா? என்று ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.