வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நகரமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நகர்ப்புற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நகர்ப்புற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆதார் இணைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை தொடங்கி உள்ளது. அதன்படி வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் இணையமற்ற வழிமுறையின்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் படிவம்-6பி மூலம் தெரிவித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

சிறப்பு முகாம்

இதற்காக வருகிற 4-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அப்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் படிவம் 6பி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 63 ஆயிரத்து 890 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 211 வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர். இது 25.29 சதவீதம் ஆகும்.தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளை விட கிராமப்புற பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவு தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர்.

ஒத்துழைப்பு

நகர்ப்புற பகுதிகளில் போதிய இணைதள வசதிகள் இருந்தும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து பதிவேற்றம் செய்வது குறைவாக உள்ளதால் வாக்காளர்கள் தாங்களே தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணையதளம் மற்றும் செல்போன் மூலம் இணைத்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணி 31.3.2023-க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story