உணவு பொருள் பட்டியலில் கள்ளை சேர்க்க வேண்டும்:என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்
உணவு பொருள் பட்டியலில் கள்ளை சேர்க்க வேண்டும் என்று என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தி உள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடிக்கு வந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருந்தலைவர் மக்கள் கட்சி 2011-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் பங்கு பெறுவோம். சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை கவர்னர் நிறுத்தி வைத்தது நியாயமற்றது. கவர்னர் மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பனைத்தொழிலாளர்கள் பதநீர் விற்றாலும், கள் விற்றதாக அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிக்கு வந்தவுடன், பனை மரத்தை வெட்டுபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், தற்போதும் பல இடங்களில் பனை மரங்கள் வெட்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
கள் போதை பொருள் அல்ல. எனவே, அதனை அரசு போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்கி உணவு பொருள் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் பனை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை தமிழ்நாடு அரசு காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக என்.ஆர்.தனபாலனுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பட்டுராஜா, தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.