மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சத்தியமங்கலம், தாளவாடி, டி.என்.பாளையம், ஆசனூர், பவானிசாகர் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் மழைக்கு முந்தைய விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
6 நாட்கள் இந்த பணி நடைபெறுகிறது. வனத்துறை ஊழியர், வேட்டை தடுப்பு காவலர்கள் என 10 சரகங்களிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கால்தடம்-எச்சம்
4 நாட்கள் வரை விலங்குகளின் கால் தடம், எச்சம், மரங்களில் உள்ள கீறல்களை வைத்து கணக்கிடப்படும். 5-வது நாளும், 6-வது நாளும் மரங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து கணக்கெடுக்கப்படுகிறது. கணக்கெடுக்கும் பணி முடிந்த பின்னர் உயர் அதிகாரிகளுக்கு அதை அறிக்கையாக தெரிவிப்பார்கள். அவர்கள் சத்தி புலிகள் காப்பகத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்று அறிவிப்பார்கள்.
கடந்த ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 80-க்கும் மேற்பட்ட புலிகளும், 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகளும் உள்ளன என்று வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
பவானிசாகர் வனப்பகுதி
பவானிசாகர் வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்கர்பாளையம், விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் நேற்று புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.