வருங்காலங்களில் பொறியியலும், மருத்துவமும் இணைந்த படிப்பு வரும்


வருங்காலங்களில் பொறியியலும், மருத்துவமும் இணைந்த படிப்பு வரும்
x

வருங்காலங்களில் பொறியியலும், மருத்துவமும் இணைந்த படிப்பு வரும் என வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.

வேலூர்

வி.ஐ.டி பல்கலைகழகத்தின் சார்பில் கிராவிடரஸ்- 23 அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 150-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். கிராவிடாஸ் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சங்கர்கணேஷ் அறிக்கை வாசித்தார்.

விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது நாம் நம்மை எப்பொழுதும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தொழில் நுட்பத்தை பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது பொறியியல், மருத்துவம் தனித்தனி படிப்புகளாக உள்ளது. வருங்காலங்களில் பொறியியலும், மருத்துவமும் இணைந்த படிப்பு வரும். அதிலும் வி.ஐ.டி. பல்கலைகழகம் முன்னிலையில் இருக்கும் என்றார்.

சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி எஸ்.கே.வார்ஷ்னே கலந்து கொண்டு பேசுகையில் சந்திரயான் வெற்றி மற்ற நாடுகளை இந்தியா திரும்பி பார்க்க வைத்துள்ளது. உங்களுடைய திறமைகளை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என்றார். கவுரவ விருந்தினராக எச்.பி.என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கம்ப்யூட் வணிக துணைத்தலைவர் மனோஜ் கிருஷ்ணா சுசீலா கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக வி.ஐ.டி. உள்ளது என்றார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story