புதுமைப்பெண் திட்டத்தில் 1,196 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்


புதுமைப்பெண் திட்டத்தில்  1,196 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 1,196 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

புதுமைப்பெண் திட்டம்

தேனி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தற்போது மேற்படிப்பு படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. இதற்காக கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

அதன்படி தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். முகாமில் பங்கேற்ற மாணவிகள் எண்ணிக்கை, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1,196 விண்ணப்பங்கள் பதிவேற்றம்

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கூறுகையில், "மாவட்டத்தில் இதுவரை 14 அரசு கல்லூரிகளில் 322 விண்ணப்பங்களும், 25 தனியார் கல்லூரிகளில் 874 விண்ணப்பங்களும் என மொத்தம் 39 கல்லூரிகளில் படிக்கும் 1,196 மாணவிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதலாமாண்டு மாணவிகள் மற்றும் முதற்கட்டமாக விண்ணப்பிக்க தவறிய 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளின் விண்ணப்பத்தை இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்றார்.


Next Story