அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் -விஜயகாந்த்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தெரிவித்து இருந்தது. மேற்கு வங்க அரசு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்திட்டத்தில் இணையாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதேபோன்று, திரிபுரா, ராஜஸ்தான், சத்தீஷ்கர் அரசுகளும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளன. தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவது அழகல்ல. எனவே, தி.மு.க. அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கொண்டு வந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலனை காத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.