கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வயல்களில் வாத்து கிடை அமைக்கும் விவசாயிகள்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வயல்களில் விவசாயிகள் வாத்து கிடை அமைத்து வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியான குச்சனூர் அருகே உள்ள கூழையனூரில் தொடங்கி வீரபாண்டி மற்றும் பழனி செட்டிபட்டி வரை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு முல்லைப் பெரியாற்று பாசனம் மூலம் 2 போகம் நெல் சாகுபடி செய்யப்படும். இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு போன்ற தானிய வகைகளும் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது முதல்போக நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
அறுவடை பணிகள் முடிந்த வயல்களில் 2-ம் போக சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2-ம் போக சாகுபடி தொடங்க உள்ள நிலையில் இடைப்பட்ட காலங்களில் வயல்வெளிகளில் ஆடு மற்றும் வாத்துகளின் கிடைகள் அமைத்து அதன் எச்சங்களை உரமாக்கி அதிக மகசூல் எடுக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வீரபாண்டி, உப்புக்கோட்டை, சடையால்பட்டி, போடேந்திரபுரம், பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் வாத்து கிடைகள் அமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து வாத்து மேய்ப்பவர்கள் கூறுகையில், ஊர் ஊராக சென்று அறுவடை முடிந்த நெல் வயல்களில் வாத்துகளை மேய்க்கிறோம். இந்த நிலத்தில் வாத்துக்கு தேவையான தண்ணீர், நெல், பூச்சி அனைத்தும் இருக்கும். இதனால் அதனை உட்கொள்ளும் வாத்துகள் நல்ல வளர்ச்சி அடையும் என்றனர்.