நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் கொள்ளை


நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் கொள்ளை
x
திருச்சி

ஜீயபுரம் அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாய்லர் ஆலை ஊழியர்

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் ஜனதா நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 42). இவர் திருச்சி பாய்லர் ஆலையில் பிட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடும்பத்தினர் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்ம ஆசாமி நின்றுள்ளார். தற்செயலாக தூக்கத்தில் எழுந்த சதீஷ்குமார், அந்த நபரை பார்த்து, அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். இதனையடுத்து அந்த ஆசாமி பின் வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து பீரோவை பார்த்தபோது, அங்கு இருந்த நெக்லஸ், தோடு மற்றும் ஆரம் உள்ளிட்ட 8 பவுன் நகைகள் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம ஆசாமி வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கதவை திறந்து...

*திருச்சி பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி சாவியை வீட்டின் அருகில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க மோதிரங்கள், தங்க சங்கிலி உள்பட 3¾ பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

பணம் பறிப்பு

*அரியமங்கலம் அண்ணாநகரை சோ்ந்தவர் வெங்கடேஷ் (27). டாக்கர் ரோட்டில் நடந்து சென்ற இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்ததாக உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த அருண்குமார் (26) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.

ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு

*தஞ்சை மாவட்டம், பழைய கரியபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (38). இவர் கடந்த 4-ந் தேதி கரூரில் இருந்து திருச்சிக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் கண்டோன்மெண்ட் பகுதியில் வந்தபோது, திடீரென சக்திவேல் பஸ்சில் மயங்கி விழுந்தார். இதை கண்ட மற்ற பயணிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story