நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம்   6 பவுன் சங்கிலி பறிப்பு
x

கச்சிராயப்பாளையம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

தொழிலாளி

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர், சூசைநகர், மேற்குதெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் தொழிலாளி. இவருடைய மனைவி ஆரோக்கியம்மாள்(வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீ்ட்டில் உள்ள ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆரோக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தான். இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் கைகளால் சங்கிலியை இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.

தப்பி ஓட்டம்

இந்த சத்தம் கேட்டு கணவர் ஆரோக்கியராஜ் படுக்கையில் இருந்து ஓடி வந்து மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் ஆரோக்கியம்மாளிடம் இருந்து சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்து கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து ஆரோக்கியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரப்படுத்த வேண்டும்

இந்த நிலையில் கச்சிராயப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மணல் மற்றும் செம்மண் கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. அதபோல் திருட்டு சம்பவங்களும் நடைபெறுவதால், குற்ற செயல்களை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story