நெகமத்தில் 2 விவசாயிகள் கொலையில் ஆன்லைனில் சயனைடு வாங்கி மதுவில் கலந்து கொடுத்தாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்


நெகமத்தில் 2 விவசாயிகள் கொலையில் ஆன்லைனில் சயனைடு வாங்கி மதுவில் கலந்து கொடுத்தாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
x

நெகமத்தில் 2 விவசாயிகள் கொலையில் ஆன்லைனில் சயனைடு வாங்கி மதுவில் கலந்து கொடுத்தாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தில் 2 விவசாயிகள் கொலையில் ஆன்லைனில் சயனைடு வாங்கி மதுவில் கலந்து கொடுத்தாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

2 விவசாயிகள் கொலை

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவருடைய உறவினர் பனப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 56). விவசாயிகளான இவர்கள் கடந்த 5-ந் தேதி மதுகுடித்துள்னர். இதில் அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதுவில் விஷம் கலந்து குடித்ததால் தான் 2 பேரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுவில் விஷம் கலந்து கொடுத்ததாக மனோகரனின் மருமகனான இடையர்பாளையத்தை சேர்ந்த சத்தியராஜ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பணம் தர மறுப்பு

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்தியராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் சேலத்தில் உள்ள கோழி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நானும், மனோகரனின் மகள் மாசிலாமணியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் எனது மாமனார் தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.37 லட்சத்துக்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்து வந்தார். இதனை அறிந்த நான் அவரிடம் பணம் கேட்டேன். அவர் தர மறுத்துவிட்டார். இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இணையதளத்தில் வீடியோ பார்த்தேன்

இதையடுத்து நான் பலமுறை சென்று எனது மனைவியை குடும்பம் நடந்த அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். எனக்கு பணம் தராமலும், எனது மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமலும் மனோகரன் தடுத்து வந்தார். இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்காக போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி என்று இணையதளத்தில் பல்வேறு வீடியோக்களை பார்த்தேன். அவருக்கு நான் அடிக்கடி மது வாங்கி கொடுத்ததால், மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். இதன்படி, ஆன்லைன் மூலம் பொட்டாசியம் சையனைடை (விஷம்) வாங்கினேன். பின்னர் மதுவை வாங்கி அதில் அந்த விஷத்தை கலந்தேன்.

சையனைடு கலந்த மது

கடந்த 4-ந் தேதி எனது குழந்தையை பார்க்க மாமனார் வீட்டிற்கு சென்றேன். அப்போது, அங்கிருந்த எனது மாமனாரிடம் விஷம் கலந்த மதுபாட்டிலை கொடுத்தேன். அவரும் அதனை வாங்கி கொண்டார். இந்த நிலையில் மறுநாள் எனது மாமனார், தனது உறவினர் வேலுச்சாமியுடன் மதுவை குடித்துள்ளார். இதில் 2 பேரும் இறந்துவிட்டனர்.

2 பேரையும் பிரேத பரிசோதனை செய்தால் விஷம் குடித்து இறந்தது தெரிந்து விடும் என்பதால், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என அங்கு இருந்த பெண்களிடம் கூறினேன். அவர்களும் பிரேத பரிசோதனை வேண்டாம் என கூறினர். ஆனால் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், மதுவில் விஷம் கலந்து குடித்தது தான் இறப்புக்கு காரணம் என்று தெரிந்துவிட்டது. இதனால் நான் பதுங்கி இருந்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிறையில் அடைப்பு

மாமனாருக்கு வைத்த குறியில் வேலுச்சாமியும் சேர்ந்து பலியாகி விட்டார்.

பின்னர் சத்தியராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.


Next Story