தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய மானியம்: துணை இயக்குனர் தகவல்


தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில்  நெல்லுக்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய மானியம்:  துணை இயக்குனர் தகவல்
x

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும் என்று துணை இயக்குனர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெல்லுக்கு மாற்றாக தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்ய மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி வாழை, மா, தர்ப்பூசணி பழம், முலாம்பழம், வெண்டை, கத்தரிக்காய், குமிழ் மலர்கள், வாசனை பயிர்கள், நாவல், சீத்தா பழம், மாதுளை, எலுமிச்சை, நெல்லி, கொய்யா ஆகியவை சாகுபடி செய்வதற்கு தேவையான விதைகள், நடவுப்பொருட்கள் போன்ற இடுபொருட்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,120 முதல் ரூ.26,250 வரை மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

அதுபோல், வெங்காயம், முருங்கை, மித வெப்ப மண்டல பழங்கள் மற்றும் பாரம்பரிய காய்கறிகள் ஆகியவற்றின் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் இனத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம்- முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான விதைகள், நடவுப் பொருள்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன. நிரந்தரப் பந்தல் அமைக்க ரூ.2 லட்சம் வரை மானியமும், டிரலிஸ் எனப்படும் குறுக்கு, நெடுக்கு வகை பந்தல் அமைத்து தக்காளி மற்றும் பீன்ஸ் பயிரிடுவோருக்கு ரூ.25 ஆயிரமும், களைதடுப்பு விரிப்பான் பெறுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.21-ம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

எனவே இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்து நில ஆவண நகல், சிட்டா, அடங்கல், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், வங்கிக்கணக்கு புத்தகம் நகல் அகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story